Tuesday, 29 August 2017

அரசியல்(அவலம்) கண்டாயோ!

தலைவியின் பதாகைநிழலில் ஒளிந்திருந்த நரிகள் கூட்டம்
அந்நிழல் மறைந்தபின்னர் ஒவ்வொன்றும் மோதிக்கொள்ள
இதுதான் சாக்கென்று மற்றவைகள் நுழையமுயல
நாறிடும் சாம்ராஜ்யம் குழந்தையையும் முகஞ்சுழிக்க வைக்கும்...

காலந்தொட்டுக்குறிப்புக் கொடுத்துவந்த மகராசன்
பின்பற்றுவோர்ப் படைசூழப் போருக்குத் தயாராக
உலகாளும் நாயகனை சகலமறிந்தவனைக்
குணமறியா அரசர்கூட்டம் 'முடிந்தால் வா' என்றழைக்க
விக்கிரமன் முதுகேறிய வேதாளம்போலவன் நில்லாமல் வினாவெழுப்பத்
தடுமாறிய நரிகள் யாவும் தூற்றுகின்றதவனை ஒலிப்பானில்...

ஊருக்குச் சோறுபோடும் உழவரினம் ஒன்று
சேற்றில் கால்வைக்க மழைவேண்டிக் காத்திருக்கக்
கழனியில் குழாய்பதித்துக் காய்ந்த கதிரில்
நீருக்குப் பதில் எண்ணெய் தெளித்து அரசர்கூட்டம்
எங்கோ ஓர்த்தொழில் வளர
விதைந்த பயிரை எரிக்கின்றார்...

என்னையும் அரசியல் பேசவைத்தப் பெருமையைக்
காணிக்கையாக்குகின்றேன் அரசனே உம் அறிவீனத்திற்கு!
தாய்மண்ணைக் கூறுபோடும் மக்கட்தொண்டரின் அருட்கொடையைக்கண்டு
செய்வதறியாது இப்பேனா மையினிடம் காட்டுகின்றேன் என் கோபத்தை!

Tuesday, 15 August 2017

எது சுதந்திரம்?

சிரித்து மகிழ்ந்து இனிப்புண்டு கொண்டாடப் பண்டிகையன்று இந்நாள்.
இருநூறு ஆண்டுகால அடிமைத்தனத்தினும், தொண்ணூறு ஆண்டுகால விடுதலை வேள்வியின் விருட்சமாயும்,
எழுபது ஆண்டுகாலம் பழமைவாய்ந்ததாகும் இந்நாள்.

ஆண்டுக்கொருமுறை நினைவில் பூத்து, கொடியேற்றி மிட்டாய் தின்று, வீடு செல்வது தேசப்பற்றாயின்...
குடும்பம் விட்டு, வீதி வந்து, கத்தியேந்தி, இரத்தம் சிந்திப் பட்டபாடுக்குப் பெயரென்னவோ?

இந்நாள்...

இரத்தம் சிந்தி, சதை அறுந்து, உயிர் நீக்கத் தியாகிகளின் ஓலம் கேட்கும் அஞ்சலித்திருநாளேயாம்.
பெரும்பாடுபட்டுப் பெற்ற சுதந்திரத்தைப் பேணிகாக்கக் கூச்சலிடும் நினைவூட்டுத்திருநாளேயாம்...

பசிக்கு உணவில்லாது, பட்டினியில் வாடும், பல்லாயிரக் குடும்பங்களின் ஏகோபித்த குரலேயாம்.
பஞ்சத்தில் சிக்குண்டு, பாய்ச்ச நீரின்றி, தில்லி வரை ஒலிக்கும் உழவனின் கதறலேயாம்...

சாக்கடை அரசியல் பேசித்திரியும் நம் செவிகளில் விழத்தவறிய, அறுபத்தி மூன்று பச்சிளங்குழந்தைகளின் மூச்சுத்திணறலேயாம்.
குடிக்கத்தண்ணீரின்றி தவிக்கும் இப்பூமியில், குளிர்பானங்களுக்குத் தாரைவார்த்த நம் பெருமையின் பறைசாற்றலேயாம்...

நூற்றி முப்பது கோடி பேர் வாழும் நாட்டில், காக்க ஒருவரின்றி, கயவர்பிடியில் சிக்கும் ஒவ்வொரு பெண்ணின் கூச்சலேயாம்.
தனியார் பிடியில் கல்வி, அரசின் கையில் மது; இரண்டிற்கும் வித்தியாசாமின்றிப் போனக்கதையின்   கூற்றேயாம்...

போரின் இராட்சதப் பிடியில் சிக்கித்தவிக்கும் சிரிய, யேமன் நாட்டு மக்களைப் போலல்லாது,
மனித ஒழுங்கீனத்தால் மாண்டு கொண்டிருக்கும் இந்திய மரபின் ஒன்றுபட்ட உண்மையேயாம்...

"என்று தணியும் இந்த சுதந்திர தாகம்?" என்று காத்திருந்து பெற்ற சுதந்திரத்தினைக்
கைகழுவத் துடிக்கும் நம் மேதாவி மனங்களுக்கு உறைக்கும்படி உறுமும் மகாகவி பாரதியின் அழியாக்குரலேயாம்...

எண்ணியதைப் பேசி, வேண்டியதைப் பெற்று, வேண்டுமிடம் செல்வதா சுதந்திரம்?
பசிக்கு உணவு, தாகத்திற்கு தண்ணீர், தேவைக்கு மிகையாகக் கல்வி, பெண்ணுக்குப் பாதுகாப்பு,நோய்க்கு மருத்துவம்,
இவ்வனைத்தும் தடையின்றிக் கிடைக்கப்பெறுவது அல்லவோ சுதந்திரம்!!!